டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதியாக சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பணியிடம் காலியாக இருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த பணி இடத்துக்கு தற்காலிகமாகப் பொறுப்பு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது நிரந்தர தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி, இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் 34-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.
யார் இந்த தாமாதிகாரி?
இவர் 1966-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பிறந்தவர். ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். 2016-ம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2018-ல் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். சென்னைக்கு வருவதற்கு முன்னதாக, இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். சிவில், கிரிமினல் மற்றும் அரசியலமைப்புச் சட்ட விவகாரங்களில் இவருக்குப் பல ஆண்டுகால அனுபவம் உண்டு.
தமிழகத்தின் மிக உயரிய நீதிமன்றமான சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள பல்லாயிரக்கணக்கான வழக்குகளை விரைந்து முடிப்பதிலும், கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும் புதிய தலைமை நீதிபதியின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமூக நலன் சார்ந்த வழக்குகள் இவர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வர உள்ளன
புதிய தலைமை நீதிபதிக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் விரைவில் ராஜ்பவனில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மூத்த நீதிபதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நீதிபதி சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த அனுபவம் பெற்றவர். குறிப்பாக மனித உரிமைகள், நிர்வாக சட்டம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பொதுநல வழக்குகள் (PIL) தொடர்பான விசாரணைகளில் அவர் வழங்கிய தீர்ப்புகள் பெரும் வரவேற்பை பெற்றன.
[youtube-feed feed=1]