சென்னை: மாநிலங்களவை தேர்தல்  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள திமுக மற்றும்  காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்  மனு தாக்கல் செய்தனர்.

திமுகவை சேர்ந்த திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்  இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், முதல்வர் மு.க. ஸ்டாலின்  வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மாநிலங்களவைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு என மொத்தம் 18 இடங்கள் உள்ளன. இதில் சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும்.

அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

காலியாகும் இடங்களில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த மாநிலங்களவை தேர்தலில் 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியும். இந்நிலையில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தது.

திமுகவிடம் உள்ள 4 மாநிலங்களவை இடங்களில் திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்று தேமுதிகவிற்கும், ஒன்று காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதே போல அதிமுகவில் உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களில் ஒன்றில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை போட்டியிடுகிறார். மற்றொன்று பாமக சார்பில் அன்புமணிக்கு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுகவின் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  அவர்களுட்ன் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இதே போல், அதிமுக சார்பில் தம்பிதுரையும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

மேலும், பாமக நிறுவனர் ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன், மாநிலங்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எம்எல்ஏக்கள் யாரும் முன்மொழியவில்லை என்பதால் அவர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளார். இவரது மனு நாளை தள்ளுபடி செய்யப்படும். இதேபோல மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் இன்று மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் வைப்புத் தொகையை சில்லறை நாணயங்களாக கொண்டு வந்தார். பரிசீலனையின் போது இவரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்த நிலையில், நாளை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மார்ச் 9 ஆம் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிருந்தால் மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

[youtube-feed feed=1]