திருச்சி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, வருகிற 11-ந்தேதி திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளதுடன், மக்களை கவரும் வகையில், மகளிர் உரிமை தொகை வழங்கியதுடன், மேலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டும், கட்சி உறுப்பினர்கள் மூலம் தேர்தல் பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளது.
ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுக சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் ஒருசில கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி எப்போதும்போல தனித்து களமிறங்குவதுடன், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. புத்தாக கட்சி தொடங்கி உள்ள விஜயின் தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், அக்கட்சியும் தனித்து களமிறங்குகிறது. இதனால் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், திமுக தரப்பில் பொதுக்கூட்டம், கட்சியின் இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி என பல மாநாடுகளை நடத்தி மக்களை சந்திக்க முழு வீச்சில் களமிறங்கி உள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வரும் 11ந்தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது. கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தகூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி, . கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி தி.மு.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே மக்களுக்கான நல்லாட்சியை தரமுடியும் என்றும் தெரிவித்தார். அந்த வகையில் வருகிற 11-ந்தேதி திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேச இருக்கிறார். முன்னதாக பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்தன. அதன்படி திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பஞ்சப்பூர் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெறும் இந்த பிரமாண்ட கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவும் பங்கேற்க இருப்பதாகவும், அதற்குள் கூட்டணியை இறுதி செய்யவும் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது.
[youtube-feed feed=1]