தஞ்சாவூர்: திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது என்றும், கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை, கனிமவளக்கொள்ளை போன்ற கொள்ளையால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது, மணல் திவாலாக போகிறது, கனிம வளம் திவாலாக போகறிது, மொத்தத்தில் உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாக போகிறது என்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். இந்த கூட்டத்தில் 4,900 நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு கியூ.ஆர்.கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வெயில் காரணமாக மேற்கூரை மற்றும் அமர்வதற்கு வசதியாக நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தவெக சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வருவார்கள் என்பதால் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பை மீறி தொண்டர்கள் நிகழ்ச்சிக்கு செல்வதை தடுக்கும் வகையில் 3 அடுக்குகளாக தகர ஷீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம். வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் நேரலையாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். நான் என்ன பேசினாலும் அதை திரித்து பேசுகிறார்கள். தமிழ்நாட்டைக் காப்பது, பிழைக்க வைப்பது திமுக ஸ்டாலின்தான் எனப் பேசுவது வேலைக்கு ஆகாது. இப்போது சிறுவர்கள் கூட ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.”
தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது, கிரிக்கெட்டில் விசில் போடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான். வரப்போகும் தேர்தலில் விசில் போடப்போவது நம்ம தவெகதான். தவெகதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் தவெக.
வேலூர் கூட்டத்தில் தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு என்று நான் ஏன் கூறினேன் என்றால், உண்மையான பிரதிநிதி நாம் என்பதற்குதான் அப்படி கூறியிருந்தேன். விஜய் vs ஸ்டாலின் எனக் கூறியிருந்தேன், தமிழ்நாடு பேரவைத் தேர்தலுக்கு டெல்லியை பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேட்டிருந்தேன், உடனே பாஜகவுக்காக விஜய் பேசுகிறார் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சென்னையில் டெல்லி டெல்லி எனக் கூறுகிறார்கள், ரைடு வந்தால் டெல்லிக்கு வெள்ளை கொடி பிடிக்கிறார்கள். தமிழ்நாட்டை காப்பாற்றுவது பிழைக்க வைப்பது எல்லாம் திமுக, ஸ்டாலின்தான் என்பதெல்லாம் வேலை செய்யாது.
எனக்கும் என்னுடைய மக்களுக்கும் நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோஷன் என்றார். வீட்டுக்கு வீடு விஜய் என்பது இந்த தேர்தலில் 100 சதவீதம் நிரூபிக்கப்படும். அடுத்த ஜென்மத்தில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
எனக்கு விவசாயத்தை பற்றி விவரமாக தெரியாது. சமீபத்தில் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு திவால் ஆகப்போகிறது என்ற ஐநாவின் கட்டுரை படித்தேன். உண்மையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. காரணம், நிலத்தடி நீரை பாதுகாக்காமல் இருப்பதுதான்.
மணலைக் கொள்ளையடித்தால் என்ன நடக்கும்? மலைகளை முழுங்கினால் என்ன நடக்கும்? கனிம வளங்கள் கொள்ளையடித்தால் பிறகு என்ன நடக்கும்? மணல் கொள்ளைக்குக் காரணம் மணல் மாஃபியா குழுக்கள். அந்த மணல் மாஃபியா குழுக்களுக்கு ஆதரவு கொடுப்பது உங்களுடைய திமுக அரசுதானே! உங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது,
மழைநீரில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் வீணாகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மாறாக, விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போடத்தான் தெரியும். விவசாயிகளுக்கு ஆதரவாக ஏதாவது ஒரு போராட்டத்தில் உடன் இருந்திருக்கிறீர்களா?
உங்கள் அரசு பொறுப்பேற்றதும் விவசாயிகளுக்காக பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்தலாமே.. உண்மையில் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? நம் ஆட்சி பொறுப்பேற்றதும் பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்துவோம்.

மழையில் நனைந்து நெல் சேதமான போது டெல்டாகாரன் என கூறிய நீங்கள் என்ன செய்தீர்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெரிய திட்டங்களை செய்ய வேண்டியது தானே. நமது ஆட்சி அடைந்தவுடன் உடனடியாக பெரிய திட்டங்களை நிறைவேற்றுவோம். அமைதியாக இருந்தால் எதுவுமே தெரியாமல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டதும் மீனவர்களுக்காக கடிதம் எழுதுவது மட்டும் போதுமா? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் இருக்க வேண்டும். மீனவர்கள் மீது யாரும் கை வைக்கக்கூடாது. மீனவர்களுக்காக தவெக ஆட்சி அமையும்.
ஒருவர் அமைதியாக இருந்தால் எதுவும் தெரியாது என்று நினைக்கின்றனர். 2 ஆவது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது”
இவ்வாறு பேசினார்.
முன்னதாக, இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி சென்ற விஜய், அங்கிருந்து வாகனத்தில் தஞ்சாவூர் சென்றார். ஏற்கெனவே தனது வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தஞ்சை சாலையில் முக்கிய இடங்களில் விஜய்யை பார்க்க மக்கள் திரண்டுள்ளனர். துவாக்குடி சுங்கச் சாவடி அருகே விஜய்யின் வாகனம் வந்தபோது, விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்தனர். தொடர்ந்து வாகனத்தின் வேகத்தை குறைத்து, தொண்டர்களுக்கு விஜய் கையசைத்து சென்றார்.
விஜயின் வேலூர் கூட்டத்தைத் தொடர்ந்து டெல்டா பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் (மார்ச் 4) புதன்கிழமை தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு நடத்த உள்ளார். இதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், கூட்டம் நடைபெறவுள்ள திடலில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து தவெக சார்பில் முக்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் விரும்பும் முதல்வர் ட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, மார்ச் 4ஆம் தேதி புதன்கிழமை, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருவையாறு உட்கோட்டம், செங்கிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அய்யாசாமிப்பட்டி பிரிவு சாலை எதிரில் பகல் 11.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற்று வருகிறது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும். காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை. QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கழக நிர்வாகிகளுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பங்கேற்பாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு BOX-களிலும், காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, 80% அளவில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]