சென்னை: திருநள்ளாறு நாளை சனிப் பெயர்ச்சியைச் யொட்டி விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் 21/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா நாளை நடைபெற உள்ளது. நாளை (06.03.2026 ) நடைபெறும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்காக, ரூ.300 முதல் ரூ.1000 வரையிலான தரிசன கட்டணங்கள், கூடுதல் பேருந்து வசதிகள், அன்னதானம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி நாளை (மார்ச் 6-ந் தேதி) காலை 8.24 மணி அளவில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அது சமயம் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். சனிப்பெயர்ச்சி நேரத்தை கணக்கீட்டு, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாரனைகள் நடைபெற உள்ளன.
மேலும் பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய, இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் என 3 விதமான கட்டண தரிசனத்திற்காக 15 டிக்கெட் கவுண்ட்டர்களை கோவில் தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய, இலவச தரிசன வரிசை மற்றும் ரூ.300, ரூ.600, ரூ.1000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமத்தை தவிர்க்க இதில் ஏதாவது ஒரு கட்டண டிக்கெட்டை தேர்வு செய்து சிறப்பு தரிசனத்தில் சனீஸ்வர பகவானை வழிபாடு செய்யலாம்.
மேற்சொன்ன அனைத்து டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் அங்கீகரித்த கவுண்ட்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் டிக்கெட், பாஸ் போன்ற அனைத்திலும் தேவஸ்தான ‘ஹாலோகிராம்’ ஒட்டப்பட்டிருக்கும் என்பதால் பக்தர்கள் வெளிநபர்களிடம் போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் சனீஸ்வரர் பகவானை சிரமமின்றி தரிசனம் செய்ய தனிப்பட்ட வழியும், சிறப்பு தரிசனம் செய்ய வசதியும் செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறு வரும் பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு போலீசாரின் ஒத்துழைப்புடன் குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்குவதற்கும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
சனிப்பெயர்ச்சியையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்களின் வசதிக்காக, திருநள்ளாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைப்பது, பஸ் நிலையத்தை மேம்படுத்துவது,

சனி பெயர்ச்சி விழா 2026 முன்னேற்பாடுகள் குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரசுவாமி திருக்கோவிலில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ சனீஸ்வர பகவான், 2 1/2 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.
சுத்த வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி, விசுவாவசு வருடம், மாசி மாதம் 22ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, ஆங்கில தேதியின்படி 06.03.2026, காலை 8 மணி 24 நிமிடத்திற்கு, ஸ்ரீ சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சி கொள்ள இருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி நேரத்தை முன்னிட்டு, கோவிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெறவுள்ளன.
பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய, தேவஸ்தானம் நிர்வாகம் கீழ்க்கண்ட வரிசைகளை ஏற்பாடு செய்துள்ளது.
இலவச தரிசன வரிசை, ரூ.300/- செலுத்தும் சிறப்பு தரிசன வரிசை, ரூ.300 மற்றும் ரூ.600/- செலுத்தும் சிறப்பு தரிசன வரிசை, ரூ.1000/- செலுத்தும் சிறப்பு தரிசன வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து டிக்கட்களும் தேவஸ்தானம் அங்கீகரித்த கவுண்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
டிக்கெட், பாஸ் போன்ற அனைத்திலும் தேவஸ்தான ஹாலோகிராம் ஒட்டப்பட்டிருக்கும் என்பதால், பக்தர்கள் போலி டிக்கெட்டுகளை தவிர்த்து உண்மையான டிக்கெட்டுகளை மட்டுமே பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பக்தர்கள் சிரமமின்றி டிக்கெட்டுகள் பெறுவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 இடங்களில் டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சனிப்பெயர்ச்சி நாட்களில் அதிக வெய்யிலிலிருந்து பக்தர்களை பாதுகாக்க, அனைத்து வரிசைகளிலும் தகர கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் நிற்க வேண்டி உள்ளதால், வரிசைகளில் உட்கார்ந்து செல்லும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பிரத்யோக தனி அடைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு தனிப்பட்ட வழித்தடங்கள் மற்றும் சிறப்பு தரிசன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வரிசையில் நிற்கும் போது பயன்படுத்தும் கழிவறை வசதிகளும் போதுமான அளவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த சனி பெயர்ச்சி விழாவிற்கு அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு, அண்டை மாநில போக்குவரத்து துறையினருடன் இணைந்து கூடுதல் பேருந்து போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக் நிறுத்துவதற்காக, தனிப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் அதிகம் குவியும் முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு தற்காலிக குளிர்சாதன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெப்பத்தை குறைத்து, பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய இது உதவு என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்கும் நோக்குடன், வரிசைகள் ஆரம்பிக்கும் இடங்கள், தரிசனம் முடிந்த பின் பக்தர்கள் வெளியேறும் பகுதிகள், பக்தர்கள் அதிகம் நடந்து செல்லும் வழித்தடங்கள் இவற்றில் அன்னதான மண்டபங்கள் அமைக்கப்பட்டு, இலவச அன்னதானம் வழங்கப்படும்.
பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இலவச கழிவறைகள் மற்றும் தற்காலிக கழிவறை வசதிகள் போதுமான அளவில் அமைக்கப்பட்டுள்ளன. நளன் குளத்தில் அனைத்து பக்தர்களும் சௌகரியமாக நீராடும் வகையில், குளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது.
பெண்கள் பக்தர்களுக்காக தனித்தனியாக உடை மாற்றும் அறைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க, குளத்தில் நீராடும் போது சோப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
அவசர கால உதவிகளுக்கு, வழி காட்டல்களுக்கு, சிறப்பு தொலைபேசி அழைப்பு வசதிகள், தகவல் மையங்கள், மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சனிப்பெயர்ச்சி விழாவிற்கு அவசர கால உதவிகளுக்கு சிறப்பு தொலைபேசி அழைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவச கட்டுப்பாட்டு அறை எண்களாக 1070 மற்றும் 1077 செயல்பட்டு வருகிறது. மேலும் அவசர உதவிக்கு 8300261071 என்ற எண்களை பக்தர்கள பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சார்பில், வரும் 06 மார்ச் 2026, மாசி 22, சனிப்பெயர்ச்சி நாளில், அனைத்து பக்தர்களும் பக்தியுடனும் அமைதியான முறையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆலய விதிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொண்டு, ஸ்ரீ சனீஸ்வர பகவானின் அருளைப் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
[youtube-feed feed=1]