சென்னை: திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு,  ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைமை கொடுத்துள்ளது. இதன் காரணமாக  தேர்தலில் போட்டியிடாமல்  மாநிலங்களவை செல்கிறது தே.மு.தி.க.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம்  பரபரப்பாக காணப்படுகிறது. கூட்டணி கட்சிகளுடன்  தொகுதி பங்கீடுகள் குறித்து திமுக, அதிமுக தலைமை  பேசி வரும் நிலையில்,  இதுவரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்தது. அதிமுக ஏற்கனவே கொடுத்த உறுதிமொழிபடி ராஜ்யசபா சீட் ஒதுக்க மறுத்துவிட்டதால், திமுக அணியில் இணைந்தது.

இந்த நிலையில்,  தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.விற்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க – தே.மு.தி.க இடையே ஒரு மாநிலங்களவை இடத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தே.மு.தி.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

2005-ல் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, தே.மு.தி.க முதல்முறையாகத் தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த காலங்களில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும், மாநிலங்களவை சீட் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததால் தி.மு.க பக்கம் தே.மு.தி.க. நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. பிப்.19 அன்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்திருந்தார். தொண்டர்களின் விருப்பப்படியும், மறைந்த தலைவர் விஜயகாந்தின் விருப்பத்தை நிறைவேற்றவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

[youtube-feed feed=1]