சென்னை: தமிழ்நாட்டில் உள் கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மதுரை வந்திருந்த பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்திதார். பின்னர், மதுரையில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழ்நாட்டின் கலாச்சார தொன்மையை, குறிப்பாக கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளைப் போற்றிப் பேசியுனார். தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை உலகறியச் செய்யவும், கீழடி ஆய்வுகளை ஊக்குவிக்கவும் ஒன்றிய அரசு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது தமிழ்நாட்டில்., கீழடி, கொடுமணல், சிவகலை, ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம், கொற்கை மற்றும் பூம்புகார் ஆகிய 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 8 அகழ்வாராய்ச்சிகளுக்கும் மத்தியஅரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில்
பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது,
“கீழடி பேசட்டும், வரலாறு மேலெழட்டும்!
கீழடி, ஆதிச்சனூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய பாஜக அரசிடம் உடனடி ஒப்புதல் வேண்டித் தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி 8 மாதங்கள் ஆகின்றன. இதற்கான முன்மொழிவுகள் ஜூலை 2025-ல் அனுப்பப்பட்டு, நவம்பரில் இந்தியத் தொல்லியல் துறையின் தலைவர் தலைமையிலான கூட்டத்திலும் அது எடுத்துக்கொள்ளப்பட்டது. இருந்தும், 8 மாதங்களாகியும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
மீண்டும் மீண்டும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். மீண்டும் மீண்டும் அது கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்கு உகந்த காலம் என்பது ஜனவரி முதல் ஜூலை வரைதான்.
இதைத் தவறவிட்டால், பருவமழையினால் களப்பணிகள் தடைபடும், முக்கிய ஆராய்ச்சிகள் தாமதமாகும், 2025-2026-ம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும். நான் கேட்க விரும்புவது… ஏன் இந்தத் தயக்கம்?
தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவுக்கு ஊறு விளைவிப்பதல்ல; இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்குப் பெருமை சேர்ப்பது.
எதைக் கண்டு பாஜக அரசு அஞ்சுகிறது? அகழ்வாராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்குங்கள், வரலாறு பேசட்டும்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]