சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?  என நாங்குநேரி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி,   தவெக தலைவர் விஜய்  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஸ்கார்பியோ கார் மற்றும் பைக்குகளில் ஆயுதங்களுடன், கஞ்சா போதையுடன் வந்த  9 பேர் கொண்ட மர்ம கும்பல்  திடீரென அங்கு அமர்ந்திருந்தவர்கள் மீது பெட்ரோல்குண்டை வீசியது. சிதறி ஓடியவர்களை கண்மூடித்தனமாக தலையில் வெட்டியது.

இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர். அத்தோடு நிற்காமல் வண்டியில் ஏறிச்சென்ற அந்த போதைகும்பல் சாலையில் எதிரே வந்தவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக வெட்டியது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த கோர தாக்குதலில் மொத்தம் எட்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது என கூறப்படுகிறது.

இதில் ஜான் மற்றும் பெயர் தெரியாத வட மாநில செங்கல் சூளை தொழிலாளி ஆகிய இரண்டு பேர் தலை சிதைத்து கொலை செய்யப்பட்டனர். அப்படி இருந்தும் வெறி அடங்காத அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளையும் வீசி பொதுமக்களை அலறி அடித்து ஓடச்செய்தது. அதே கும்பல் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை வெட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே போதை கும்பலின் இந்த அட்டூழியத்தை கண்டித்து பெரும்பத்து பகுதியில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தது சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த கொடூரர்களின் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 58 வயதான நெல்சன் மற்றும் 53 வயதான கணேசன் ஆகியோர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் நாங்குநேரி மற்றும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்களை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலை வெறி கும்பலின் தாக்குதலால் உயிரிழந்த ஜாண் மார்க்கின் மனைவி வாய் பேச இயலாத, கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளி என்றும் அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் கடும்  கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ” நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள். இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.

தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது. வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது.

பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்” என்று  தெரிவித்துள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  நாங்குநேரி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் அரிவாள் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதற்கு கஞ்சா பரவல் காரணம்; தி.மு.க. அரசே இதற்குப் பொறுப்பு. தமிழ்நாட்டில் கஞ்சா தடையின்றி கிடைப்பது இத்தகைய சம்பவங்களுக்கு காரணம். தி.மு.க. ஆட்சியில் கஞ்சா கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை; ஆண்டுக்கு 22 லட்சம் கிலோ கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என குற்றம் சாட்டி உள்ளார்.

பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  ‘நாளொரு கொலையும், பொழுதொரு வன்முறையுமாக’ தமிழகத்தை கடந்த 5 வருடங்களில் சீரழித்து விட்டது திராவிட மாடல் திமுக அரசு. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெட்டலாம், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்ற சூழ்நிலை உருவானதற்கு காரணம் தமிழக அரசின் நிர்வாகமின்மை மற்றும் அலட்சியம் தான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.  5பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?

இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?

நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?

போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?

பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?

மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி.

இவ்வாறு  காட்டமாக கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]