சென்னை: தமிழ் நடிகரின் திருமண பிரச்னை குறித்து செய்தி வெளியிட கூடாது என ஊடகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான குடும்பப் பிரச்னைகள் குறித்து செய்திகளை வெளியிடவோ, விவாதிக்கவோ அச்சு மற்றும் இணையதள ஊடகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தம்பதியினரை மட்டுமின்றி, அவர்களின் மைனர் குழந்தைகளையும் மனதளவில் பாதிக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரம் மற்றும் தனியுரிமையைப் (Right to Privacy) பாதுகாப்பது மிக முக்கியம் என்று சுட்டிக்காட்டி ஏற்கனவே வெளியிடப்பட்ட அவதூறான மற்றும் ஆட்சேபனைக்குரிய செய்திகளை அனைத்து இணையதளங்களும் உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் இந்த உத்தரவை நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது நடிகர் தனது மனைவி மற்றும் மாமியார் தனக்கு எதிராக அவதூறு பரப்பக் கூடாது என்று கோரியிருந்தார். இதற்கு உனக்கு மற்றவர்கள் எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ, அதை நீயும் மற்றவர்களுக்குச் செய்யாதே” என்ற பைபிள் வசனத்தை நீதிபதி மேற்கோள் காட்டினார். அதே சமயம் நடிகரும் தனது மனைவிக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தார்.
இரு தரப்பு வழக்கறிஞர்களும் இனிமேல் ஒருவருக்கொருவர் எதிராக அறிக்கை விடமாட்டோம் என்று உறுதிமொழி அளித்தனர். வழக்கின் ஒரு தரப்பு மற்றொரு தரப்பு மீது திட்டமிட்டு தகவல்களை கசியவிட வாய்ப்புள்ளதால், பொதுவான ஒரு தடையை விதிக்க வேண்டும் என்று நடிகரின் வழக்கறிஞர் கோரினார். இதனை ஏற்ற நீதிபதி, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் எதிர்மறையான செய்திகள் குழந்தைகளின் மனநலனைப் பாதிக்கும். ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளின் உரிமைகள் பிரகடனம் (UNCRC) ஆகியவையும் குழந்தைகளின் தனியுரிமையைப் பாதுகாக்க வலியுறுத்துகின்றன,” என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து நீதிபதி தனது தீர்ப்பில் பல்வேறு முக்கிய சட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டினார். அதில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023-ன் படி குழந்தைகளின் நல்வாழ்வுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தக் கூடாது. புட்டசுவாமி வழக்கு (2017) மற்றும் கௌஷல் கிஷோர் வழக்கு (2023) ஆகியவற்றின் படி, கண்ணியம் மற்றும் தனியுரிமை என்பது ஒரு நபரின் அடிப்படை உரிமையாகும். இது அரசுக்கு எதிராக மட்டுமின்றி, தனியார் அமைப்புகளுக்கு (ஊடகங்கள் உட்பட) எதிராகவும் செல்லும்.
ஜான் டோ (John Doe) உத்தரவின்படி அடையாளம் தெரியாத நபர்கள் காப்புரிமையையோ அல்லது தனியுரிமையையோ மீறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை யாகப் பிறப்பிக்கப்படும் உத்தரவு இது என்று கூறியுள்ளார். மேலும், திருமண முறிவு என்பது தம்பதியினரின் தனிப்பட்ட விஷயம் என்றும், இதில் பொது நலன் ஏதும் இல்லை. ஒருவர் பிரபலமாக இருக்கிறார் என்பதற்காக, அவரது அந்தரங்க வாழ்க்கையை மிகைப்படுத்தித் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இன்றைய சமூக வலைதள யுகத்தில், பார்வையாளர்களின் எண்ணிக்கையை (Viewership) அதிகரிக்க செய்திகள் திரித்து வெளியிடப்படுகின்றன. நுகர்வோர் கலாச்சாரத்திற்காகக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பலிகொடுக்க முடியாது, நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது (Sub Judice), ஊடகங்கள் அதற்கு இணையாகத் தனியாக விசாரணை நடத்தக் கூடாது என்ற கொள்கையையும் நீதிபதி நினைவு கூர்ந்தார்.
[youtube-feed feed=1]