சென்னை: ​வார இறுதி விடுமுறை நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து 785 சிறப்​புப் பேருந்துகள் இயக்​கப்​படும் என  தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்​துத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக்​கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கையில்,  பிப்​.27-ம் தேதி, பிப்​.28-ம் தேதி மற்​றும் மார்ச் 1-ம் தேதி வார விடு​முறை நாட்​களை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதனைக் கருத்​தில் கொண்டு தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி இயக்​கப்​படும் பேருந்துகளுடன் கூடு​தலாக சிறப்​புப் பேருந்துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு நாளை (பிப்​.27) 310 பேருந்துகளும், நாளை மறு​நாள் (பிப்​.28) 325 பேருந்துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு நாளை 55 பேருந்துகளும், நாளை மறு​நாள் 55 பேருந்துகளும் மேற்​கூறிய இடங்​களி​லிருந்​தும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மேலும் பெங்​களூர், திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோவை ஆகிய இடங்​களி​லிருந்​தும் பல்​வேறு இடங்​களுக்கு 100 சிறப்​புப் பேருந்துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மாதவரத்​திலிருந்து நாளை மற்​றும் நாளை மறு​நாள் தலா 20 சிறப்​புப் பேருந்துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊரி​லிருந்து சென்னை, பெங்​களூர் திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவைக்கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் சிறப்​புப் பேருந்துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் இந்த வார இறு​தி​யில் வெள்​ளிக்​கிழமை 5,850 பயணி​களும், சனிக்​கிழமை 2,607 பயணி​களும் மற்​றும் ஞாயிறு அன்று 5,944 பயணி​களும் பயணம் மேற்​கொள்ள முன்​ப​திவு செய்​துள்​ளனர். இச்​சிறப்பு பேருந்து இயக்​கத்தை கண்​காணிக்க அனைத்து பேருந்து நிலை​யங்​களி​லும் போதிய அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]