சென்னை:  சென்னைக்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள்,  16 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்து சென்னை மாநகர தலைமை தேர்தல் அலுவலரான மாநகராட்சி கமிஷன் குமரகுருபரன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.  கடந்த 23ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது,  சென்னை மாவட்டத்திற்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் (நோடல் அலுவலர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்

முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  பிப்ரவரி 23ந்தேதி வெளியிட்டிருந்தார். இதில், தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேரும் உள்ளனர்.  மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கும் 2 தொகுதிகளுக்கு ஒரு அலுவலர் என 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு  உள்ளனர்.

[youtube-feed feed=1]