சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த 7 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரலுக்குள் நடைபெற வேண்டும். அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்றவை மறைமுகமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் நடைபெற்ற வருகின்றன.
இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இளைஞர்கள் சமுதாயத்தின் வாக்குகள் அனைத்தும், புதியதாக கட்சி தொடங்கி களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய்க்கு ஆதரவாகவே உள்ளதால், தமிழக அரசியல் களம் தகதகவென தகிக்க தொடங்கி உள்ளது. ஆட்சியை கைப்பற்ற அதிமுக பாஜக கூட்டணி ஒருபுறம் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் நிற்க, திமுக கூட்டணி பலத்தை கூட்டி உள்ளதுடன், பல்வேறு கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில், திமுக சார்பில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அமைத்துள்ளார்.
அதன்படி, தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்
