சென்னை: பாமகவின் சின்னமான  மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் குறித்து,  உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், நீதிமன்றத்தின் நடவடிக்கை  பாமக நிறுவனர் ராமதாசுக்கு  மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

பாமகவை கைப்பற்றுவதில்,  தந்தை மகனுக்கு இடையே மோதல் எற்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸ் தான் பாமக என்று கூறி வருகிறார். ஆனால்,  அவரது மகன் அன்புமணி, கட்சியன் பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டி, பாமகவின் தலைவரான தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இதை தேர்தல் ஆணையமும்அங்கீகரித்து, அவருக்கே மாம்பழம் சின்னம் என ஒதுக்கி உளளது. அதாவது,  அன்புமணி தலைமையிலான பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியது.

இதை ரத்து செய்யக்கோரி  பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நிதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், டாக்டர் ராமதாஸ் புதிதாக மேலும் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஒரு வழக்கில், “பா.ம.க.. தலைவராக நான்தான் உள்ளேன். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதன்படி, தலைவராக பதிவு செய்யும்படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது.

தற்போது தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் என்ற நிலை உள்ளது. அதனால், என்னை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும்வரை, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது. தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு மனுவில்,”பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தை பயன்படுத்து கின்றனர். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த மாம்பழம் சின்னம் எனக்கும். நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என்றும் அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த 2 வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது‘ இரு மனுக்களையும்  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக்கொள்ள  உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்,   உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும்  கூறி உள்ளது.

[youtube-feed feed=1]