சென்னை: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளதை  கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என  தமிழ்நாடு பா.ஜ.க  தெரிவித்துள்ளது.

இதுவரை பாஜக, அதிமுக, அமமுக என மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து அரசியல் செய்து வந்த தேமுதிக, முதன்முறையாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது.  தி.மு.க. வுடன் கூட்டணியை உறுதி செய்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கருத்து கேட்பில் அனைவரின் விருப்பமும் திமுக கூட்டணியாகவே இருந்தது. நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்தின்படி திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

தேமுதிகவின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளதை  கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என  தமிழ்நாடு பா.ஜ.க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

பா.ஜ.க  தனது எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,  தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக.

அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது! என்று பதிவிட்டுள்ளனர்.

தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு மூழ்க கூடிய கப்பலில் ஏறியிருக்கிறார்களே என்று நினைக்கும்போது எங்களுக்கு வருத்தம் தான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

அதேபோல், த.மா.க தலைவர் ஜி.கே.வாசன், விஜயகாந்த், திமுக உடன் கூட்டணி வைத்ததே இல்லை. திமுக, தேமுதிக கூட்டணி மக்கள் மனநிலைக்கு ஏற்றதாக இல்லை என்று கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]