சென்னை: மாற்றுத்திறநாளிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக போராடிய  மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியைச்சேர்ந்த  கே. பாலகிருஷ்ணன் மனைவி  ஜான்சி ராணி  மீது காவல்துறை  கடுமையாக தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலால்  பலத்த காயம் அடைந்த ஜான்சி ராணி, அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலை…!” என விமர்சித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணனின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜான்சி ராணி மீது சென்னை காவல்துறை  காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த ஜான்சி ராணி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் சமீப காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று ( பிப்ரவரி 17) அன்று நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணனின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜான்சி ராணியும் கலந்துகொண்டார். போராட்டக்காரர்கள் திமுக அரசை எதிர்த்து கடுமையாக குரல் எழுப்பினர்.

இதையடுத்து, போராடியவர்களை  வலுக்கட்டாயமாக கைது செய்த சென்னை காவல்துறையினர், எந்த அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு இடங்களில் தங்கவைத்ததாக கூறப்படுகிறது.  அவர்களை வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். சுமார்,   ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மாற்றத்திறனாளிகளை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து திருமங்கலம் பெரியார் சமூக நலக்கூடம் என்ற இடத்திற்கு  அழைத்துச் செல்வதாக 17 பஸ்களில் ஏற்றினர். ஆனால், அவர்களை அங்கு இறக்கிவிடாமல்,   பேருந்தில் வைத்தேஅலைக்கழித்ததாகவும்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு  எந்தவொரு அடிப்படை வசதிகளும்  ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால், காவல்துறையை மாற்றுத்திறனாளிகள் கண்டித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த காவல்துறையினர், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜான்சி ராணி உள்பட பலர்மீது காட்டு மிராண்டித்தனமாக  தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஜான்சி ராணி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.

இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி காவல்துறை தாக்கி நள்ளிரவு ஒரு மணி அளவில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை எமர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும்,   மாலையில் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து 13 பேருந்துகளில் ஏற்றி தாம்பரம், கிளாம்பாக்கம், என அலைகழிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை இரவு 2 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்தோடு விட்டுவிட்டு காவல்துறையினர் சென்றுள்ளனர். அங்கேயே உணவின்றி பட்டினியோடு காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் என கூறியுள்ளது.

இந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவரின் மனைவி, மாற்றுத் திறனாளிகள் மீது இரக்கமின்றி திமுக அரசு தாக்குதல் நடத்தியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,  , “உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து , வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான சிபிஐஎம் மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் மனைவியுமான பா. ஜான்சிராணி படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று , முதல்வர் ஸ்டாலின் அரசு அனைத்து விதமான ‘கோரிக்கைக் குரல்களை’ ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய பாசிஸ மனோபாவத்துக்கான சான்று.

ஜனநாயக விரோத, பாசிஸப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து , அடிப்படை உரிமைகளை கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]