சென்னை: சென்னையில் உள்ள டி.மாண்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் .. சாலை, தெருக்களுக்கு வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஏற்கனவே கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 30ந்தேதி அன்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சென்னை பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதையடுத்து, தற்போது அந்த சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, டிமாண்டி சாலை எம்.எஸ்.விஸ்வநாதன் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதுபோல , பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சாலை, தெருக்களுக்கு வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தமிழ்த் திரைப்பட உலகத்தின் பழம்பெரும் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3-வது தெருவிற்கு “திருச்சி லோகநாதன் தெரு” என்றும் தமிழ்ப்பாடகர் சங்கீத சேவகர் சீர்காழி கோவிந்தராஜன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு “சீர்காழி கோவிந்தராஜன் சாலை” என்றும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு “எம்.எஸ். விஸ்வநாதன் சாலை” என்றும் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருச்சி லோகநாதன் தெரு
தமிழ்த் திரைப்பட உலகத்தின் பழம்பெரும் பின்னணி பாடகரும், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி அடக்குமுறைக்கு ஆளான தேசபக்தரும், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கலைவாணர் என்.எஸ்.கே. ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டரும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், பேரறிஞர் அண்ணாவால் இசைத்தென்றல் பட்டமும் பெற்றவரும், இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியவருமான திருச்சி லோகநாதனின் கலைச்சேவையை சிறப்பிக்கும் வகையில் அவர் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3-வது தெருவிற்கு “திருச்சி லோகநாதன் தெரு” என்று பெயர் சூட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் இன்றையதினம் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.
சீர்காழி கோவிந்தராஜன் சாலை
தமிழ் மரபு இசை மற்றும் திரை இசை தழைத்தெழச் செய்த முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த வெண்கலக்குரல் வளமிக்க தமிழ்ப் பாடகர் சங்கீத சேவகர் பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் நினைவாக அவர் வசித்த மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு “சீர்காழி கோவிந்தராஜன் சாலை” என்று பெயர் சூட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் இன்றையதினம் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.

எம்.எஸ். விஸ்வநாதன் சாலை
கடந்த 70 ஆண்டுகளாக தென்னிந்திய மக்களைக் குறிப்பாகத் தமிழ் மக்களை தனது இன்னிசையால், மெல்லிசையால் மகிழ்வித்து, தமிழ் மக்களின் நினைவில் நீங்கா இடம் பெற்றவரும், நம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு அணி செய்யும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞரின் விருப்பத்தின் பேரில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்து, 1970-லிருந்து இன்றும் அரசு மற்றும் கல்வி சாலைகளில் தமிழ்த்தாய் வாழ்த்தினை முழங்க செய்தவரும், ஆறு முதல்வர்களுடன் பணிபுரிந்த பெருமைக்குரியவருமான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களை சிறப்பிக்கும் வகையில் அவர் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு “எம்.எஸ். விஸ்வநாதன் சாலை” என்று பெயர் சூட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் இன்றையதினம் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, துணை மேயர் மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர். கௌஷிக், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.