சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் மகளிர் உரிமை தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய தினம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்ததும் அந்த அரசு சார்பில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இந்த நிலையில், 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். வரும் 20-ஆம் தேதி 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்த நிலையில், மாநில அரசே செயல்படுத்துவது குறித்தும், மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்துதல், புதிய மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலை மற்றும் மேம்பாலப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து புதிய சலுகைகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக விரிவாக்கம் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]