சென்னை:   திமுக காங்கிரஸ் இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பான சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை இன்று மாலை பெங்களூர் பயணம் மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பாக  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன ககார்கேவுடன் ஆலோசிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக இடம்பெற்றுள்ள நிலையில்,  இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை கூட்டணி கட்சிகளிடையே பேசும்பொருளாக மாறி உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர், திமுகவிடம் இந்த முறை அதிக தொகுதிகள் கேட்க வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பேசி வருகின்றனர்.  இதற்கு திமுக தலைமை மறுப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இருந்தாலும், காங்கிரஸ் எம்.பி, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி உள்பட சிலர் தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறி, கூட்டணி ஆட்சி, அதிக தொகுதி என பேசி வருகின்றனர்.

 சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது மதுரை வடக்கு தொகுதியை கண்டிப்பாக கேட்போம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்ததுடன்,  அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை  வலியுறுத்தினார்.

இதற்கிடையில் பிரவீன் சக்ரவர்த்தி, திமுக அரசு வழங்கும்,   மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை எனச் சொல்லி தி.மு.க கூட்டணிக்குள் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதனால், திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று அவசரமாக பெங்களூரு செல்ல இருப்பதாகவும், பின்னர் அங்கிருந்து டெல்லி செல்வ இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, இன்ற   மதியம் சென்னையில் இருந்து  புறப்பட்டு செல்வதாகவும், அங்கு கார்கேவுடன் ஆலோசனை நடத்த இருபபதாக கூறினார். மேலும், கூட்டணி பற்றி பொதுவெளியில் பேசக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை கூறியுள்ளை நிலையில்,   மாணிக்கம் தாகூரின் பேச்சு காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகவும், இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் சர்ச்சை கருத்தை பேசுவது ஏன் என என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில்  நாளை காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் மற்றும் பாத யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் பங்கேற்க உள்ள நிலையில் செல்வபெருந்தகையின் பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]