மதுரை: ‘ஆட்சியில் பங்கு தராவிட்டால் த.வெ.க உடன் கூட்டணி’ வைப்போம்  மதுரையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்  கலந்துகொண்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியில் பங்குகோரி திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால்,  ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என திமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாக்கூர் உள்பட சிலர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இந்த நிலையில்,  மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தி.மு.க கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்தும், த.வெ.க-வுடனான கூட்டணி குறித்தும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ஆவேசமாகப் பேசியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த  கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்பட வேண்டும், அதிகாரம் வழங்கப்பட வேண்டு என்றும், நம்மை அடிமைபோல நடத்துகின்றனர், அதற்கு முடிவு கட்ட வேண்டும்  என வலியுறுத்தினர்.

இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி வேல்முருகன், தி.மு.க கூட்டணியை விமர்சித்து கடுமையாக பேசினார்.  தி.மு.க.வினர் நம்மை கேலி செய்கின்றனர். அடிமைபோல நடத்துகின்றனர். இதனால், வரும் தேர்தலில்,  ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை என்று வலியுறுத்தியவர்,  ஆட்சியில் பங்கு தராவிட்டால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பேசியவர், தவெக  விஜய் தனித்து நின்றாலே 30% வாக்குகளைப் பெறுவார். அவருடன் காங்கிரஸ் சேர்ந்தால் தமிழ்நாட்டை ‘தட்டி தூக்கிவிடலாம்’. இது ஒரு நல்ல வாய்ப்பு. விஜய் காங்கிரஸை அழைக்கிறார். தி.மு.க நம்மை கூட்டணியில் இருந்து தள்ள நினைக்கிறது. ஆட்சியில் பங்கு தாருங்கள் என மாணிக்கம் தாகூர் கேட்டால் அவர்களுக்கு பதிலளிக்க முடியவில்லை என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மாணிக்கம் தாகூர், எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான்

எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம். உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் 8 எம்.பி. க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது என்றார்.

 கூட்டம் முடிவடைந்த பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி மாணிக்கம் தாகூர், கட்சியின் பூத் கமிட்டி பணிகளை வலுப்படுத்துவது குறித்து பேசியதாவதும், பிப்ரவரி 25-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடித்து, காங்கிரஸிடம் ஆள் இல்லை என்று கூறுபவர்களின் வாயை அடைக்க வேண்டும். மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானது. இந்தத் தொகுதியை காங்கிரஸூக்கு வாங்கித் தருமாறு காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் கூறிவிட்டேன். அதனால் இந்த தொகுதியில்  காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றே தீருவோம் என்றார்.

[youtube-feed feed=1]