சென்னை: தமிழ்நாட்டில் இன்று திடீரென மகளிர் உரிமைத் தொகை ரூ. 5,000 மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளன.

திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்றும், எதிர்க்கட்சிகள், முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம், அதனால் வாக்குவங்கி அரசியலுக்காக ரூ.5000 வங்கியில் வரவு வைத்துள்ளார் என குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதற்கிடையில்,  மகளிர் உரிமைத் தொகை .5,000 வைக்கப்பட்டதை அடுத்து பெண்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திராவிட மாடல் ஆட்சி 2.0-வில் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.31 கோடி மகளிர்  வங்கி கணக்கில் உரிமைத் தொகை  ரூ.5000 இன்று  (பிப்ரவரி 13, 2026) காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ. 1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது, என்றும், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இது இரண்டாயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் உத்திரவாதம் அளித்துள்ளார்.

இந்த திடீர் அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இது 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில்  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு என்று விமர்சனம் செய்துள்ளதுடன்,  2024, 2025ல் கோடைக்காலமே வரவில்லையா?, 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது, உரிமைத்தொகையை தடுக்கிறார்கள் என்பது வேடிக்கையாக உள்ளது.  மாதம் ரூ.2,000 கொடுப்போம் என்பது அதிமுகவின் வாக்குறுதி, அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் குல விளக்கு திட்டம் அமல்படுத்தப்படும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் தள பதிவில்,  “தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக “1000 ரூபாய்” கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து “கோடைக்கால சிறப்புத் தொகை” கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது “தேர்தல் நேரத்து பணம்” வரவு வைக்கும் இந்த “Patchwork” வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?

செப்டம்பர் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே “ரூ.3,50,000”! இதை “விடியா ஆட்சி வீட்டு பில்லே சாட்சி” என்று வீடு வீடாக சென்று அ.தி.மு.க. அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு? இப்போது “மாதம் 2000 ரூபாய்” என்று நான் அளித்த அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே. யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து “ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்” என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. “அனைத்து குடும்ப அட்டைக்கும்” என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.

தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு “குல விளக்குத் திட்டம்” முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் “மாதம் ரூ.2000″ என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை   வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளன.

விலைவாசி சுமையில் தவிக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும். பெண்களின் உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மரியாதையாக இந்த முடிவை பார்க்கிறோம். இந்த மக்கள் நலத் திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசின் அணுகுமுறையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடுமையாகக் கண்டிக்கிறது. மாநில உரிமைகளையும் மக்களின் நலனையும் புறக்கணிக்கும் இந்த போக்கை ஏற்க முடியாது. சமூக நீதியையும் மனிதநேயத்தையும் உறுதி செய்யும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதியாகக் காக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.பி. கனிமொழி, “பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ. 3 ஆயிரத்துடன், கோடைக் காலச் செலவுகளைக் கருத்தில் கொண்டு சிறப்புத் தொகுப்பாக ரூ. 2 ஆயிரமும் சேர்த்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கியிருப்பதோடு, தமிழ்நாட்டு மகளிரின் நலனில் என்றும் அக்கறை கொண்டு செயல்படும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்ததும், மகளிருக்கான உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி” என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை, X தளப் பதிவில் அவர், “மத்திய அரசு மகளிர் உரிமை மானியங்களை தடுக்க இருப்பதாக கூறி, முன்கூட்டியே அறிவித்துள்ளதாக தெரிவித்து இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய அரசு அதை தடுக்க முயற்சிப்பதால் தான், தனது அனைத்து தோல்விகளுக்கும் மத்திய அரசை குறை கூறும் பழக்கம் அவருக்கு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட அது தடுக்கப்படவில்லை என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மேலும் எந்தவொரு முடிவும் மத்திய அரசிடமிருந்து அல்ல, தேர்தல் ஆணையத்திடம் இருந்து வர வேண்டும்.

தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் இதை அறிவிக்கிறார். தமிழகத்தில் நிலவும் அதிக எதிர்ப்பு காரணமாக திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை. 90 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணக்குகளில் ஒரே இரவில் அதைப் பெற்றதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள். இதற்காக ஜன்தன் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் இந்தியாவை தொடங்கிய நமது மாண்புமிகு பிரதமருக்கு தமிழக முதல்வர் பாராட்ட வேண்டும், நன்றி சொல்ல வேண்டும்.

மாண்புமிகு நரேந்திர மோடியின் முத்ரா கடன்கள் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனளித்துள்ளன, இது அவர்களை தொழில் முனைவோராகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்களாகவும் மாற்றியுள்ளது. பெண்களுக்கான ஊக்கத்தொகையை அறிவித்து டாஸ்மாக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் ஒரு கணக்கெடுப்பு குடிகாரனைக் கொண்ட ஒரு குடும்பம் மாதத்திற்கு 6000 ரூபாய்க்கு மேல் மதுபானத்திற்காக செலவிடுவதாகக் கூறுகிறது.

தமிழ்நாடு அரசு கடன் ரூ. 4.5 லட்சம் கோடியில் இருந்து ரூ. 9.5 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. அதாவது ஒரு தமிழரின் கடனை ரூ. 1.4 லட்சமாகவும், வட்டிக்கு 40,000 ஆகவும் உயர்த்தியுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 2000 அறிவித்துள்ளார், அதை தமிழக முதல்வர் இப்போது நகலெடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிகையாளர் திமுக அமைச்சரிடம் பொங்கல் ஊக்கத்தொகை ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டபோது, இந்த ஆண்டு கொடுத்தால் மக்கள் மறந்துவிடுவார்கள், அடுத்த ஆண்டு வழங்குவோம் என்று பதிலளித்தார், அவர்கள் அதைச் செய்தார்கள். இவை அனைத்தும் மு.க. ஸ்டாலின் தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக அறிவிக்கிறார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

துணைமுதல்வர் – உதயநிதி , 1.31 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் இன்று காலை ரூ. 5000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில் திராவிட மாடல் 2.0ல் மகளிருக்கான உரிமைத்தொகையை ரூ.2000 உயர்த்தி வழங்குவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கி வந்த திமுக அரசு, பிப்ரவரி மாதத்திற்கான தொகையுடன், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.2 ஆயிரத்தை முன்பணமாகவும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து இந்த தொகை வரவு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வாறு திடீர் கரிசனம் காட்டுவதற்காக கம்பி கட்டும் கதைகளையெல்லாம் முதலமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார். அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப் படுவதை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதனால் தான் திமுக அரசு முந்திக் கொண்டு இந்தத் திட்டத்தை அறிவித்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் எல்லாம் களைந்து விட்ட நிலையில், தமது நாடகங்களையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில் தான் முதலமைச்சர் வசனம் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தாலும் கூட ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு தடை இல்லை என்பது பாமரர்களுக்குக் கூட தெரிந்த உண்மை. முதலமைச்சருக்கும் இது தெரியும். ஆனாலும், தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மொத்தமாக பணத்தைக் கொடுத்தாவது மக்களின் எதிர்ப்பைக் குறைக்க முடியுமா? என்ற எண்ணத்தில் தான் இப்படி ஒரு முயற்சியை செய்திருக்கிறார். என்ன செய்தாலும் மக்களின் கோபம் குறையாது என்பதே உண்மை. தமிழ்நாட்டு மக்களின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டிருக்கும் அக்கறை என்னவென்பதையும், அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தான் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவில்லை. அதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதெல்லாம்,” வாக்குறுதி அளித்தது உண்மை தான். ஆனால், எப்போதிலிருந்து வாக்குறுதி செயல்படுத்தப்படும் என்று தேதியை சொன்னோமா?” என அதிகாரத் திமிரில் திமுக அமைச்சர்கள் வினா எழுப்பியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வர இருப்பதை அறிந்து கொண்டு 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டத்தை திமுக அரசு அரைகுறையாக செயல்படுத்தியதையும் மக்கள் மறந்துவிடவில்லை.

அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்குவதாக அறிவித்த திமுக, 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கி விட்டு, மீதமுள்ள 1.10 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க முடியாது என்று அறிவித்தது. அந்த துரோகத்தையும் பாதிக்கப்பட்ட 1 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் இன்னும் மறக்கவில்லை. பொங்கல் பரிசு வழங்குவதிலும் திமுகவின் அணுகுமுறை மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது. எப்போதெல்லாம் தேர்தல் வரவில்லையோ, அப்போதெல்லாம் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பொங்கல் பரிசு வழங்க மறுப்பதும், தேர்தல் வந்து விட்டால் அந்த ஆண்டில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதும் திமுகவின் கபட நாடகங்கள். இந்த நாடகங்கள் இனியும் தமிழகத்தில் எடுபடாது.

தமிழ்நாட்டில் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதும், கிட்டத்தட்ட 150% அளவுக்கு சொத்து வரியும், குடிநீர் வரியும் உயர்த்தப்பட்ட போதும், ஆவின் பால் விலையை மறைமுகமாக உயர்த்திய போதும் தமிழ்நாட்டு மக்கள் மீது திமுகவுக்கு வராத அக்கறை இப்போது வந்திருப்பது விந்தை தான். ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் உச்சத்தை அடைந்துள்ளது; அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கடந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்று பா.ம.க. அறிவித்திருந்தது. இவை தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தான் நானும் அறிவிப்பை வெளியிடுகிறேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உழவர்களுக்கான கொள்முதல் விலை, பாசனத் திட்டங்கள், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, மின் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி செயல்படுத்த மறுத்த மு.க.ஸ்டாலின், ஏற்கனவே வாங்கிக் குவித்திருக்கும் சுமார் ரூ.10 லட்சம் கோடி கடன் போதாதென கூடுதலாக ரூ.6,550 கோடியை கடனாக வாங்கித் தான் இந்தத் தொகையை வழங்கியுள்ளார் என்பதையும், இந்தத் கடனும் தங்கள் தலையில் தான் விழும் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாக உயர்த்தப்பட்ட கட்டணங்கள், வரிகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கூடுதலாக பறிக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ரூ.1.25 லட்சத்தை பறித்துக் கொண்டு ஒரே முறை ரூ.5 ஆயிரத்தை வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது. வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள். மே மாதத்தில் வரும் தேர்தல் முடிவு அதை உறுதி செய்யும் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதிமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறேன். ரூ. 5000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும், எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்திகள். பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும், கவனத்தோடும் செலவிடப்படும். வீட்டுக்கும், நாட்டிற்கும் பயன்படும். அவர்கள் அதை தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தித்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன். மகளிர் உரிமைத் தொகை அடுத்த 2 மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி செய்த பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

அமமுக தலைவர் டிடிவி தினகரன்,  தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.5,000 மட்டுமில்லை. ரூ.50,000 கொடுத்தாலும் தி.மு.க தோல்வியடையப் போவது உறுதி என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்

விசிக தலைவர் திருமாவளவன், “மகளிர் உரிமைத் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக – அதிமுக கூட்டணியினர் சதி செய்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலமாக தடை ஆணை பெறுவதற்கும் முயற்சி செய்து இருக்கிறார்கள். இதை அறிந்த முதல்வர், ஐந்தாயிரம் ரூபாயை பெண்களது வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளார். இது கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பு” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தமாக தலைவர ஜி.கே.வாசன், மகளிர் உரிமைத்தொகை ரூ.5000 வரவு வைத்து தேர்தல் மாயையை உருவாக்க முயற்சிப்பதாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

வி.சி.க எம்.பி.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்தியில், மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புற பெண்கள்தான் என வி.சி.க எம்.பி.ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் தடுப்பதில் கிராமப்புற பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வழங்கியதற்கு விசிக எம்.பி. ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம் மகளிரின் கணக்கில் ரூ.5000 வரவு வைத்து முதலமைச்சர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். மக்களுக்கான நலத்திட்டங்கள் தேர்தலுக்கு முன் வந்தாலும் அது நல்லதுதானே என சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.கவின் குலவிளக்கு திட்டத்தால் மக்களிடம் ஆதரவு பெருகியதால் தி.மு.கவிற்கு தோல்வி பயம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கோடி கோடியான கொட்டிக் கொடுத்தாலும் தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டன என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்,  “வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13-ம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப் படுவது ஏன்? புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.

அதுமட்டுமா? திமுக. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் தவெகவைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.

எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜய்யின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

[youtube-feed feed=1]