சென்னை: தோல்வி பயத்தால் தவெகவினர் மீது திமுகவினர் அராஜக தாக்குதல்  நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணும் காயமடைந்துள்ளார் என தவெக தலைவர் விஜய் கடுமையாக சாடியுள்ளார்.

தவெகவின் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்துள்ளதாக விஜய் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் முதல்முறை தேர்தலில் களமாடவுள்ளது. இதனால், 4 முனை போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் தனது அரசியல் எதிரி என திமுகவையும், கொள்கை எதிரி என பாஜகவும் அறிவித்து இந்த தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி எனக் கூறி வருகிறார்.

இந்த நிலையில், சென்னை பாரிமுனை பகுதியில்  நேற்று பகல் தவெகவினர் சிலர் பொதுமக்களிடம்  தேர்தல் தொடர்பான சர்வே எடுத்துள்ளனர்.  இவர்கள் அனுமதி இன்றி இந்த சர்வே எடுப்பதாக கூறி அப்பகுதி திமுகவினர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்து கைகலப்பு ஏற்பட்டது. இதில் தவெகவினர் பலர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோதலை தடத்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில்  காயமடைந்த தவெகவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் தவெகவினரை கட்சியின் முன்னணி நிர்வாகிகளான சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அத்துடன் திமுகவினர் அரஜாகத்தில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அமைச்சர் சேகர்பாவுவின் அடியாட்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், இந்த தாக்குதல்  சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக  அவர்  வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!” எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]