நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, மற்றவர்கள் வழக்கில் வெற்றி பெற்றதை பார்த்து, “எங்களுக்கும் அதே நிவாரணம் வேண்டும்” என்று கேட்பது உரிமையாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, “பல வருடங்கள் கழித்து, மற்றவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை மட்டும் காரணமாகக் கொண்டு, அதே நன்மையை கோர முடியாது” என்று கூறியது.

இந்த வழக்கில், மனுதாரர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற தீர்ப்பை, பாம்பே தொடக்கக் கல்வி சட்டத்தின் கீழ் மாநில அரசு மறுபரிசீலனை செய்து ரத்து செய்தது.
அந்த முடிவை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. மேலும், 2014ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும் அதில் தலையிடவில்லை. அதனால் அந்த விவகாரம் இறுதி முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது.
ஆனால், மனுதாரர்கள், 2021ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய வேறு ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டி, தங்களுக்கும் அதேபோல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடினர். அந்த வழக்கில் அவர்கள் தரப்பாகவே இல்லை.
இதைக் கண்டித்து, உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. “இந்த மனுதாரர்களின் விவகாரம் ஏற்கனவே முடிவடைந்தது. அதனை இவ்வளவு காலம் கழித்து மீண்டும் கிளப்ப முடியாது” என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், “ஒரு வழக்கில் சிலருக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாலே, எல்லோருக்கும் அது தானாகவே பொருந்தும் என்று சொல்ல முடியாது. தாமதம், அலட்சியம், ஏற்றுக்கொள்ளல் போன்ற விதிவிலக்குகள் உள்ளன” என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது குறித்து, உத்தரப் பிரதேச அரசு Vs அர்விந்த் குமார் ஸ்ரீவாஸ்தவா என்ற பழைய தீர்ப்பையும் நீதிமன்றம் நினைவுபடுத்தியது.
அதே நேரத்தில், 2021ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பில் இருந்தவர்கள் மற்றும் தற்போதைய மனுதாரர்கள் ஒரே நிலைமையில் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும், பழைய, முடிவடைந்த விஷயங்களை மீண்டும் வழக்காக தாக்கல் செய்வதைத் தவிர்க்க, வழக்கறிஞர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
“வழக்கின் முழு பின்னணியையும் தெளிவாக நீதிமன்றத்தில் வைக்க வேண்டும். ஏற்கனவே இறுதி தீர்ப்பு பெற்ற விஷயங்களை மீண்டும் கிளப்ப முயலும் வழக்குகளை வழக்கறிஞர்கள் ஊக்குவிக்கக் கூடாது. இது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும், நீதி வழங்கும் முறையின் ஒழுங்கை பாதுகாப்பது அவசியம்” என்று நீதிமன்றம் தெரிவித்தது.
[youtube-feed feed=1]