சென்னை: மாம்பழ சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அன்புமணி தலைமையிலான பாமகவே உண்மையான பாமக என்றும், அதற்கே கட்சியின் சின்னமான மாம்பழ சின்னம் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பாமகவில் தந்தை மகனுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதற்கிடையில் பாமக கட்சி தலைவர் என்ற முறையில் பொதுக்குழுவை கூட்டிய அன்புமணி அதில், மீண்டும் பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்டதுடன், கட்சி தலைவராக தீர்மானம் நிறைவேற்றி, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. இதை ஏற்று தேர்தல் ஆணையம் பாமக தலைவராக அன்புமணியைஅங்கீகரித்ததுடன், அவருக்கே கட்சியின் சின்னமான மாம்பழம் சின்னத்தையும் வழங்கியது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்தக் கடிதத்தை ரத்து செய்தும், தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரியும், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தனக்கே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கும் என உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், பிப்ரவரி 2-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையை அடுத்து, இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]