திருச்சி: மார்ச் 8 ஆம் தேதி திருச்சியில் திமுக மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தல்கால் நடும் விழா அமைச்சர் நேரு தலைமையில் பிப்ரவரி 1ந்தேதி நடைபெற்றது.,

திமுக மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக்க வேண்டும் என்கிற அடிப்படையில் திருச்சி மாநாடு நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் அறிவிக்க வட வாய்ப்பு உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கிடு மற்றும் பிரசாரம் என  தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.  தமிழ்நாடு முதலமைச்சரும் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ’ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திமுக மாநாடு திருச்சி அருகே நடைபெற உள்ளது.

 மார்ச் 8 ஆம் தேதி திருச்சி அடுத்த சிறுகனூரில் திமுக மாநில மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான, பணிகளை தொடங்கும் விதமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூரில் மாநாடு நடைபெறும் இடத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு, “மார்ச் 8 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாடு இதற்கு முன்பு நடந்த மாநாடுகளை காட்டிலும் சிறப்பாக இருக்கும். அந்த மாநாடு சுமார் 500ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த மாநாடு சிறப்பாக நடைபெறும்” என்றவர்,  “திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இது குறித்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஒரு கட்சித் தலைவர் மற்றொரு கட்சி தலைவரை சென்று சந்திப்பதை இயல்பானது. அதுபோல் தான் கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். அவர் எடப்பாடி பழனிச்சாமி போல் முகத்தை கர்சீப்பால் மூடிக்கொண்டு சென்று யாரையும் சந்திக்கவில்லை. இது வெளிப்படையாக நடந்த சந்திப்பு” என்றார்.

[youtube-feed feed=1]