சென்னை: தமிழ்நாட்டில் 14 வயது சிறுமிகளுக்கு இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி நாளை (ஜனவரி 27ந் தேதி) தொடங்குவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிக்கு ரூ.14,000 வரை செலவாகும். ஆனால், தமிழ்நாடு அரசு இத்தடுப்பூசியை இலவசமாக வழங்க உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் 14 வயது சிறுமிகள் 3,38,649 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் பணியை நாளை (27ந் தேதி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைக்கிறார். சென்னை, கிண்டி, கிங் நிலைய வளாகத்தில், 6.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.417.07 கோடி செலவில், அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு வரும் 27ந் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான பணிகளை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது,
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2024 ஜீலை 28 அன்று தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் அடிப்படையில் உலகிலேயே முதன்முறையாக உலகத்தரம் வாய்ந்த குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு வரும் 27ந் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். 6 தளங்களுடன் கூடிய மருத்துவமனை கட்டடம், 3,37,990 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் கூடிய முதுகலை பட்டதாரிகள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்பு கட்டடம், 78,220 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் கூடிய பேராசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டடம், 17,010 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஒரு தளத்துடன் கூடிய உணவகம் மற்றும் கூடுதல் வசதிகளுடன் 6.5 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை கட்டப்படவிருக்கிறது.
இதில் அவசர சிகிச்சை பிரிவு, புற மருத்துவ பயனாளிகள் பிரிவு, குழந்தைகளுக்கான நாளமில்லா சுரப்பி வார்டு, நுரையீரல் சிகிச்சை வார்டு, டயாலிசிஸ் வார்டு, இருதய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, எலும்பியல் சிகிச்சை பிரிவு, ரத்தவியல் பிரிவு, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, ஒட்டுறுப்பு சிகிச்சை பிரிவு, ஆராய்ச்சி ஆய்வகம் என பல்வேறு வகைகளிலான சிறப்புமிக்க பிரிவுகள் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளன. இம்மருத்துவமனை 18 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.
இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு என்பது உலகளவில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் என்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே தடுப்பதற்கு HPV (Human papilloma Virus) தடுப்பூசியினை செலுத்துவதன் மூலம் இதனை தடுக்க இயலும் என்று உலக சுகாதார அமைப்புகள் கூறியுள்ளது. இதனால் இந்தியாவிலேயே முதன்முறையாக HPV தடுப்பூசி இலவசமாக வழங்கிட, சட்டமன்றத்தில் 2025 மார்ச் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 14 வயதுடைய சிறுமிகள் 3,38,649 பேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் HPV தடுப்பூசி போடும் பணி வரும் 27ந் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பைலட் பேஸ் வகையில் 3,38,649 பேருக்கு தருமபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த சிறுமிகள் 30,209 பேர் பயன் பெற உள்ளனர்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட அனைவருக்கும் படிப்படியாக இத்தடுப்பூசி செலுத்தப்படவிருக்கிறது. இத்தடுப்பூசிக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.14,000 வரை செலவாகும். தமிழ்நாடு அரசு இத்தடுப்பூசியை இலவசமாக வழங்க உள்ளது.” என குறிப்பிட்டார்.
[youtube-feed feed=1]