மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல், மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தகைசால் தமிழர் நல்லகண்ணு, தனது 101-வது வயதில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 25ந்தேதிஸ்ரீ காலமானார். பின்னர் அவரது உடல், மருத்துவமனையிலிருந்து தொண்டர்கள் புடைசூழ ஆம்புலன்ஸ் மூலம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நல்லகண்ணுவின் உடல் வைக்கப்பட்டது. நேற்று முதல் அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். நேற்று முன்தினம் மாலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், பிற்பகலில், முதலமைச்சர், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
அப்போது, தகைசால் தமிழர் நல்லகண்ணு உடல் அருகே நின்று, தகைசால் தமிழருக்கு வீர வணக்கம், செவ்வணக்கம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கமிட்டார்.

அதைத் தொடர்ந்து, 72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தியாகராய நகர் பாலன் இல்லத்திலிருந்து நல்லகண்ணு உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதில், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தி பிரியா விடை கொடுத்தனர்.
பின்னர், நல்லகண்ணுவின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது. அதை மருத்துவமனை நிர்வாகம் முழு மரியாதையுடன் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக நல்லக்கண்ணு, தனது இறப்பிற்குப் பின், உடலலை மருத்துவமனைக்கு தானமாக வழங்க வேண்டும் என்று நல்லகண்ணு விருப்பம் தெரிவித்திருந்தார். அதனாலேயே, அவரது கடைசி விருப்பப்படி, அவரது உடல் அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.

எளிமைக்கு அடையாளமாகவும், தலைமுறைகளைக் கடந்து பொதுவுடைமைக் கொள்கைகளை தூக்கிச் சுமந்த நூற்றாண்டு கண்ட தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடியாகவும் திகழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு.
சிறுவயதில் இருந்தே அரசியல் ஆர்வம் கொண்ட நல்லக்கண்ணு, ஆரம்பத்தில் காங்கிரஸ் பெரியக்கத்தில் இருந்து பின்னர் கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் போராட்டங்களை மேற்கொண்டார். தனது இளம் வயது முதலே கம்யூனிச இயக்கத்தில் சேர்ந்த இவர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அப்போது நிலசுவந்ததாரர்களுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் களத்தில் நின்றார். சுமார் 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தொடர்ந்து கழித்த இவர், அதன் பிறகும் தனது மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்னின்று கர்ஜித்தார்.
தனது 80-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிக்கே, அதனை திருப்பிக் கொடுத்தார். தமிழ்நாடு அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை பரிசுத்தொகையாக வழங்கியது. அதில், பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.
அதுமட்டுமின்றி முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்து தகைசால் விருது அறிவிக்கப்பட்டு, 2-வது ஆண்டு விருது (2022-ம் ஆண்டு) நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது. அந்த விருதோடு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்ட நிலையில், அதே மேடையில் முதலமைச்சரின் நிதிக்கு அந்த தொகையுடன் தனது சொந்த பணம் ரூ.5000 பணத்தையும் சேர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.
இவ்வாறு, தன்னலம் கருதாது பொதுநலத்திற்காகவே வாழ்ந்த தோழர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக நேற்று (பிப்.25) காலமானார். அன்னாரது மறைவுக்கு அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தோழமை கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.