சென்னை
எந்த கட்சியினரும் தமிழக அரசின் அனுமதி பெற்ற பிறகே போராட்டம் நடத்த வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.
இன்று இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 3 ஆவது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர்ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
இடையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டு, அதன் மீது விவாதம் நடந்து வருகிறது.
இந்த விவாதத்தில் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் பேசி வருகின்றனர். பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி போராட்டங்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்று கூறினார்.
இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்,
”அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும்; போராட்டம் செய்வதற்கென சில பகுதிகள் உள்ளன. திடீரென்று அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறும்போது வழக்கு போடப்படுகிறது”
என்று பதில் அளித்துள்ளார்.