சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 23.12.2024ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தின் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியாக பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும் அதே நபர் அந்த மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக பல்கலைக்கழக உள் புகார் விசாரணை குழுவின் ஒத்துழைப்புடன் விசாரணை மேற்கொண்டு வந்த கோட்டூர்புரம் போலீசார், அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்துள்ளனர்.
சாலையோரத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் இரவு நேரங்களில் பல்கலைக்கழக வளாகத்தின் ஒதுக்குபுறமான இடங்களுக்கு சென்று அங்கு தனிமையில் இருக்கும் மாணவர்களை படம்பிடித்து மிரட்டி தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், ஞானசேகரன் மீது ஏற்கனவே 2011ம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தில் இதேபோன்ற ஒரு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.