திருப்பாவை – பாடல் 11  விளக்கம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

அந்தவகையில், மார்கழி மாதத்தின் 11 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 11.

திருப்பாவை பாடல் 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

கோபாலர்கள், கன்றுகளையுடைய கறவைப் பசுக்களை வைத்துப் பராமரித்து பால் கறப்பர்; பகைவர்களின் வலிமை அழியும்படி போர் புரிவர்; அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களது பொற் கொடி போன்ற பாவையே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற மெல்லிய வயிற்றை உடையவளே! காட்டில் திரியும் மயில் போன்ற பெண்ணே! எழுந்து வாடி கண்ணே! நம் உறவினராகிய பெண்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு வாசலிலே கூடி நின்று முகில் வண்ணன் கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம், செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமல், வாய் பேசாமல் எதற்காக இப்படி உறங்குகின்றாய், இந்த தூக்கத்திற்கு பொருள் தான் என்ன? அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?