கோவை

வரும் 28 ஆம் தேதி வரை அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது.









கடந்த மாதம் 27 ஆம் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக நக்கீரன் கோபாலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி பேசும்போது, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி தி.மு.க.வைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்ஜலீல் ரேஸ்கோர்ஸ் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் ஓம்கார் பாலாஜி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தும் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படவில்லை.  சென்னை காவல்துறையினர் ஓம்கார் பாலாஜியை கைது செய்து, ரேஸ்கோர்ஸ் காவல்துரையினரிடம் ஒப்படைத்து அவர் கோவை அழைத்து வரப்பட்டார்.

ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு அரசு மருட்த்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஓம்கார் பாலாஜி கோவை 3-வது நீதிபதி கோர்ட்டில் நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி, அவரை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதால் ஓம்கார் பாலாஜி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.