சென்னை: மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட 5 நாள் ரெய்டில் கட்டுக்கட்டாக  ரூ. 12.41 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் மற்றும் அவரது மருமகனும் விசிக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய 5 நாள் ரெய்டில்,  ரூ.12.41 கோடி பணம் பறிமுதல்; வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது மருமகனும் விசிக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனாவுக்கு  சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில்  கடந்த 14ந்தேதி முதல்    அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 5 நாட்களாக நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் குறித்து அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவர் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக  ஏற்கனவே  2 முறை மார்ட்டின் வீடு, அவருடைய அலுவலங்களில் வருமான வரிசோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில்   சென்னை, கோவையில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகங்களில்  மற்றும் ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதற்கிடையில், 2து நாள் சோதனையின்போது,  சென்னையில் உள்ள மார்ட்டின் அலுவலகத்தில் இருந்து ரூ.8 கோடியே 80 லட்சம் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து,  கோவையில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் மருத்துவக் கல்லூரியில் சோதனை நடந்தது. இதேபோன்று மார்ட்டினின் உறவினர்களான கோவை சிவானந்தபுரத்தில் உள்ள ஜான் பிரிட்டோ என்பவரது வீடு, சிவானந்தா காலனியில் உள்ள அந்தோணியா ஆகியோரது வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மேலும்,  தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், உ.பி., மேகாலயா, பஞ்சாபில் 22 இடங்களில் நடந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ரூ.12.41 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும்,   வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!