திருச்சி: திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த கல்லணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் இன்று காலை தமிழக அமைச்சர்களால்  திறக்கப்பட்டது. இதன் காரணமாக, டெல்டா  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே பாசன வசதிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று (புதன்கிழமை) காலையில் கல்லணை திறக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மற்றும்  ஆட்சியர்கள், அதிகாரிகள், விவசாயிகள் பூக்கள் தூவி காவிரி தண்ணீரை வரவேற்றனர்.

உலகத்தில் பழமை வாய்ந்த அணையாக விளங்கும் அணைகளில் ஒன்று  கல்லணை. இது சுமார் 1850 அடி நீளத்தில் 66 அடி அகலத்தில் 18 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணை மூலம் இரண்டரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணைக்கு காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் உள்ள திருவரங்கம் ஆற்றில் இருந்த து தண்ணீர் வருகிறது. அங்கிருந்துதான் காவிரி ஆறு நான்காக பிரிகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர்,  அகண்ட காவிரி வழியாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நேற்று மாலை வந்தது. நுங்கும், நுரையுமாக ஆர்ப்பரித்து வந்த தண்ணீரில் விவசாயிகள் பூக்கள், நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர்.
முன்னதாக அணையின் அருகே , கருப்பணச்சாமி, ஆஞ்நேயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், மேளதாளத்துடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, டி.ஆர்.பி.ராஜா, சி.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ-க்கள், ஐந்து மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் ஊர்வலமாகச் சென்று, முதலில், காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டனர்.
இதையடுத்து, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது விவசாயம் செழிக்க வேண்டியும், காவிரி நீரை வரவேற்றும் நவதானியங்களையும் பூக்களையும் ஆற்றில் விட்டனர்.

பிறகு காவிரியில், 40 ஷட்டர்கள், வெண்ணாற்றில், 33, கொள்ளிடத்தில், 30, கல்லணைக் கால்வாயில் ஆறு, மணற்போக்கியில் 5, கோவிலடி மற்றும் பிள்ளைவாய்க்காலில் தலா ஒரு ஷட்டர்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டது.

இதன்படி முதல் கட்டமாக காவிரியில் 1,500 கன அடி, வெண்ணாற்றில் 1,000 கன அடி, கல்லணை கால்வாயில் 500 கன அடி, கொள்ளிடத்தில் 400 கன அடி என தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக உயர்த்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கர் அளவுக்கு பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.