சென்னை

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்துகான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன.

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும், அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. இவை வேளாண் வளர்ச்சிக்கும், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கும் வழி வகுக்கும்.

அடுத்து வரும் ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும், ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை, ஒருமுறை உதவியாக ரூ.6,000 நிதியுடன் தொழில்பழகுனர் பயிற்சி அளிக்கப்படும், முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும், அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும், தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. ’

என்று தெரிவித்துள்ளார்.