சென்னை: தமிழ்நாட்டின் இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ள திமுக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திருப் பெற வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்து உள்ளது.

அதன்படி நாளை (ஜூலை 19ந்தேதி) பாமக சார்பில் போராட்டமும், வரும் 21ந்தேதி (ஜூலை 21) அன்று நாம் தமிழர் கட்சி சார்பிலும், வரும் 25ந்தேதி (ஜூலை 25) திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மக்களை பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாட்டைக் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. திமுக அரசு ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மாதம் ஒரு முறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் கட்சிகள் திமுக அரசுக்கு போராட்டங்களை அறிவித்து உள்ளது.

பாமக தலைவர் அன்புமணி:

மின்கட்டண உயர்வை கண்டித்து நாளை பா.ம.க. போராட்டம்-டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் மக்களை பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாட்டைக் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது என கூறி ள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான்

தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோல், வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும். அதன்படி,  வரும் 21-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீரழிவு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றும் சீரழிந்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

திமுக கூட்டணி கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (ஜூலை 17) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் குறியீட்டென் உயர்வுக்கு தகுந்தாற் போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திட வேண்டும். தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசே உற்பத்தி செய்யும் வகையில் புதியமின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.

அதானி நிறுவனத்துக்கு வழங்கும் அதீத கொள்முதல் விலையை குறைத்திட வேண்டும். மத்திய அரசின் தனியார்மயமாக்கலுக்கு இரையாகாமல் அனைவருக்கும் மின்சாரம், மக்கள் வாங்கும் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

2) பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு தலைவர் ஆம்ஸ்ட்ராங் இம்மாதம் 5-ம் தேதி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெற்றுத் தர தேவையான சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக காவல்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரையும் தனது பொறுப்பில் எடுத்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், திருவேங்கடம் என்பவர் தப்பி ஓடியதாகவும், புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்து காவல்துறையினரை சுட முயற்சி செய்த போது திருவேங்கடத்தை காவலர்கள் சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு என்கவுண்டரின் போதும் இவ்வாறான காரணத்தை காவல்துறை தெரிவிப்பது வழக்கமானதாக இருக்கிறது. சமீபத்தில் புதுக்கோட்டையில் துரை என்கிற துரைசாமி என்ற குற்றவாளி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு காவல் துறை சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது. மனித உயிரையும், மனித உரிமைகள் குறித்தும் கவலைப்படாமல் இப்படி அடுத்தடுத்து என்கவுண்டர்கள் என்பது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்.

குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு என்கவுண்டர்கள் தீர்வல்ல. புலன் விசாரணையை பலப்படுத்தவும், வழக்குகளை விரைந்து முடிப்பதும், சட்டத்தின் வழிமுறையில் நின்று குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசமைப்பு சட்டத்தின் வரையறை ஆகும். மேலும், தேசிய மனித உரிமை ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவை கொடுத்துள்ள இதுதொடர்பான வழிகாட்டுதல்களை காவல்துறையினர் உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது”

இவ்வாறு அதில் கூறப்பட்டள்ளது.