சென்னை: நீட் எதிர்ப்பு என்பது திமுக உருவாக்கிய போலி பிம்பம் என்று குறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வின் பயனாக, தமிழ்நாட்டில் பயனடைந்தவர்களின்   பட்டியலை வெளியிட்டு பதில் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு காரணமாக பாடத்திட்டம் என கூறி வந்த நிலையில், தற்போது மாநில திட்டத்திலும், மாநில மொழிகளிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு  மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் நடப்பாண்டு நீட் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் போன்றவற்றால் நீட் தேர்வு முடிவுகளில் குழப்பம் ஏற்பட்டது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து இன்று திமுக மாணவரணி போராட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில்,  நீட் தேர்வு வந்த பிறகே,  தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?  என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்  வலைதளப் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,  நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு ஏகே ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழக பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.

நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக்குழு வழங்க மறுப்பது ஏன்?

முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?

இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்துடன் நீட்டில் பயன்பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற விவரப்பட்டியலையும் வெளியிட்டு உள்ளார்.