சென்னை’
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்த நிலையில் இன்று முதல்வர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர்.
சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை நேற்று காலையில் இருந்து அதிகரிக்க தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
தற்போது இந்த கள்ளச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கருணாபுரத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இன்று விஷ சாராய விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார். இன்றைய சட்டப்பேரவை அலுவல் முடிவடைந்த உடன் தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி, மதுவிலக்கு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.