சென்னை: அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திட ஆணையிட்டுள்ளேன். அரசு மருத்து வர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமை என  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தனது  தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர், திடீரென மருத்துவர் பாலாஜியை  கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்திய நபர் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர்  என்பது தெரியவந்துள்ளது.  கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் ஒரு மாதமாகப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், அதுகுறித்து கேட்டபோது ஏற்பட்ட மோதலில்,  ஆத்திரம் அடைந்த விக்னேஷ், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார்.

இது தொடர்பாக, விக்னேஷ் உட்பட 4 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் காவலர்கள் குவிக்கப்பட்டு அந்த இடம் பரபரப்பானது. இந்த நிகழ்வு குறித்து செய்தியறிந்து மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிர மணியன், “இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக” தெரிவித்தார். மேலும் மருத்துவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.