நெல்லை
காவல்துறையினர் நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக மேலும் ஒரு தனிப்படை அமைத்துள்ளனர்.’
கிழக்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). கடந்த 4-ந்தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். ஜெயக்குமார் இறப்பதற்கு முன் எழுதிய கடிதங்களும் வெளியாகின.
சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் துணை காவல்துறை சூப்பிரண்டுகள், ஆய்வாளர்கள் தலைமையிலான 10 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ,மறைந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், அவரின் வயிற்று பகுதியில் இரும்பு தகடும், கடப்பா கல்லும் கட்டப்பட்டு இருந்தது.
க்அவரை மர்மநபர்கள் கொலை செய்து கடலில் வீச முயன்று இருக்கலாம் என்றும், அது ஏதோ காரணத்தால் முடியாமல் போனதால் அவரை தோட்டத்தில் போட்டு தீ வைத்து எரித்ததாகவும் பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை அவரின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை.
சம்பவ இடங்களில் இருந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் புலனாய்வு துறை நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சேகரிக்கும் தடயங்களின் அடிப்படையில் காவல்துறை தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். காவல்துறையினர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்கின் உறவினர்கள், அவரது ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், தோட்டத்தில் வேலை செய்தவர்கள், தூரத்து உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை ஆய்வாளர் சாகுல்ஹமீது தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப்படை காவல்துறையால் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படையிலும், விசாரிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களையும் ஆராய்ந்து அதில் ஏதும் சந்தேகம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர்.
நேற்று கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் வீட்டுக்கு தனிப்படை காவல்துறையினர் நேற்று மாலை 4 வாகனங்களில் சென்று வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.