சென்னை

சென்னை காவல்துறை யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடை சட்டம் கொண்டு வந்துள்ளது.

கடந்த 4ம் தேதி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் காவல்துறைய்னர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தேனியில் சவுக்கு சங்கரின் காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை சென்னை அழைத்து வந்து சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக அவர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அலுவலகத்தில் போலீசார் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரூ. 2 லட்சம் பணம், கஞ்சா அடங்கிய 4 சிகரெட்டுகள், கார், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். எனவே சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

தற்போது சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதற்கான ஆவணங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கோவை சிறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது புகார்கள் வந்துகொண்டிருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.