சென்னை:  காவல்துறையினர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கரிடம் பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் வைத்து தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு  அண்மையில் பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த மே 4ஆம் தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். மேலும் அவர்மீது கஞ்சா வழக்கும் போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு  செய்திருந்தனர். இதையடத்து, சவுக்கு சங்கர் வழக்கில் தன்னையும் காவல்துறை கைது செய்யகூடும் என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி குமரேஷ் பாபு யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுதி நேரம் இது . நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் விதமான பேட்டி எடுப்பவர்களை முதலில் எதிரியாக சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். மனு மீது ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தலைமறைவான ரெட்பிக்ஸ் எடிட்டர்  டெல்லியில் இருந்த நிலையில், அவரை தமிழ்நாடு காவல்துரைறை கைது செய்துள்ளது. . இதை தொடர்ந்து அவர் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.