சென்னை: ஏற்கனவே அறிவித்தபடி, மே 6ஆம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த (2024) மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதைத்தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், தமிழ்நாடு முழுவதும் 86 மையங்களில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தன. இதைத்யடுத்து மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடவும், மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாக்குகள் எண்ணும் ஜூன் 4ந்தேதி வரை உள்ளதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிடும் வகையில், தேர்தல் ஆணையத்திடம் பள்ளி கல்வித்துறை அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரும் மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுவார் எனவும், அனுமதி கிடைக்காவிட்டால் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.