சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், விதிகள் மீறி எடுத்துச்செல்லப்பட்ட பணம், பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, இதுவரை (ஏப்ரல் 29வரை) தமிழ்நாட்டில்  ரூ.1,309 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு வரும் 26ந்தேதி நடைபெற்றது.  இதையடுத்து 3வது கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தேர்தல் காரணமாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அமலில் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினர் விதிகளை மீறி பணம், பொருட்கள் எடுத்துச் செல்வதை கண்காணித்து பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த 28-ந்தேதி வரை சோதனைகளின்போது,  பிடிக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ரூ.179.91 கோடி ரொக்கப் பணம், ரூ.8.65 கோடி மதிப்புள்ள மது வகைகள், ரூ.1.36 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.1,083.78 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகள், ரூ.35.80 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள் என ரூ.1,309.52 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.