சென்னை: சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களுக்கு மே 1முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் விடுமுறை கால விசாரணை மற்றும் அதற்கான நீதிபதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறை அறிவிக்கப்படுவது வாடிக்கையானது. அதுபோல இந்த ஆண்டும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி, மே 1 முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை காலத்தில் சென்னை மற்றும் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , வாரம்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில், மே மாதம் 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.குமரேஷ்பாபு, ஆர்.கலைமதி ஆகியோரும், 15, 16-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.டி.ஆஷா, ஆர்.சக்திவேல், என்.செந்தில்குமார் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.சரவணன், பி.பி.பாலாஜி ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் அவசர வழக்குகளை விடுமுறை காலத்தில் விசாரிப்பார்கள்.
இதேபோல உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மே 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.வேல்முருகன், அப்துல் குத்தூஸ், பி.தனபால் ஆகியோரும், 15,16-ம் தேதிகளில் பி.வேல்முருகன், பி.வடமலை, கே.ராஜசேகர் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, எஸ்.ஸ்ரீமதி, சி.குமரப்பன் ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.விஜயகுமார், எல்.விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.