ஜோலார்பேட்டை
மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் சென்னை வரும் ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன.
தினமும் சென்னையில் இருந்து காட்பாடி-ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு மற்றும் கேரள மாநிலத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதை முற்றிலும் மின்மயமாக்கப்பட்டதாகும்.
நேற்று இரவு 7.30 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் பகுதியில் 25 ஆயிரம் கிலோ வோல்ட் உயர் மின்னழுத்த கம்பி திடீரென அறுந்து விழுந்தது. கோைவயிலிருந்து சென்னை நோக்கி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் அப்போது அந்த இடத்தை நெருங்கிக்கொண்டிருந்தது .
இவ்வாறு மின்கம்பி அறுந்து விழுந்ததை பார்த்த என்ஜின் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை வளத்தூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தியதோடு ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மேல்பட்டியிலும், சேலம்- அரக்கோணம் பாசஞ்சர், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வளத்தூரிலும், கோவையிலிருந்து சென்னை நோக்கி வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்திலும், மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பச்சகுப்பம் ரயில் நிலையத்திலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
ஜோலார்பேட்டை ரயில்வே ஊழியர்கள் மற்றும் உயர் மின்னழுத்த பிரிவு ஊழியர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று புதிய மின் உயர் மின்னழுத்த கம்பியை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இங்கு தற்காலிகமாக தன்பாத் ரயில் மட்டும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்றது. மற்ற ரயில்கள் தொடர்ந்து அங்கேயே நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.