அம்பாசமுத்திரம்
நாளை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன. எனவே பொதுமக்கள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பராமரிப்ப் பணிகள் முடிவடைந்துள்ளன.
அம்பாசமுத்திரம் வன உயிரினக்காப்பாளர் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
”கடந்த வருடம் டிசம்பர் மாதம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திலுள்ள சூழல் சுற்றுலாப் பகுதியான மணிமுத்தாறு அருவிப்பகுதியில் பெய்த கனமழையால் பொது மக்கள் நின்று குளிக்கக்கூடிய இடங்கள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்தது.
எனவே பொது மக்கள் நலன்கருதி மணிமுத்தாறு அருவிப்பகுதியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆண்கள் பெண்கள் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு மணிமுத்தாறு அருவிப்பகுதியில் பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகின்ற 26.04.2024(வெள்ளிக்கிழமை) முதல் பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்குக் காலை 8 மணி முதல் மதியம் 3 வரை வன விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகின்றது”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.