சிவகங்கை
சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் மீது முதியவர்களிடம் டு. 525 கோடி பண மோசடி செய்ததாகக் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாகத் தமிழக காங்கிரஸ் குழு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இது குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக தொடர்புத்துறைத் தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அவர்கள் செய்தியாளர்களிடம்,
“மயிலாப்பூர் நிதி நிறுவனம் சார்பில் வேதநாதன் அளித்துள்ள காசோலை 4 மாதங்களாக வங்கியில் செல்லுபடியாகாமல் பணத்தைச் செலுத்தியவர்களுக்கே திரும்பி வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் என்பதும் தங்கள் கடின உழைப்பில் கிடைத்த தொகையை இங்கு டெபாசிட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தேவநாதன் கடந்த 125 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிறுவனத்தில் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளார். பாஜக வேட்பாளர் தேவநாதனை இந்தப் புகார் குறித்து விசாரிக்க வேண்டும்”
எனத் தெரிவித்தனர்.
சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் மீது அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகார் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேவநாதன் தேர்தல் முடிந்த உடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.