சென்னை

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இன்று தமிழக முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். 98 வயதாகும் ஆர் எம் வீரப்பன் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் அவருக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆர்.எம்.வீரப்பன் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமின்றி திரை, இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

”ஆர் எம் வீரப்பன் அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மீகம் என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் அரசியலில் வலம் வந்தவர்.  ஆர்.எம்.வீரப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” 

என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.