ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற 108 கோடி ரூபாய் மதிப்பிலான  99 கிலோ போதைப் பொருட்கள் கடலில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கடத்தலுக்கு காரணமானவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக அயலக துறை உறுப்பினர் ஜாபர் ஜாதிக் மற்றும் அவரது தம்பி சலிம் தலைமையிலான போதை கடத்தல் கும்பல் பல நாடுகளுக்கு போதை பொருட்களை கடத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில்,  தற்போது  ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற99 கிலோ போதைப் பொருட்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னதாக போதைப்பொருள் இலங்கைக்கு  கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறைக்கு   கிடைத்த தகவலின்படி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை தாண்டி மன்னார் வளைகுடா பகுதியில் வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் இந்திய கடலோர காவல்படை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையை நோக்கிச் சென்ற நாட்டுப்படகை அவர்கள் மடக்கி சோதனையிட்டனர். அதில் 5 சாக்குகளில் போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதனை கைப்பற்றிய அதிகாரிகள், படகை ஒட்டி வந்த 4 பேரை கைது செய்து,  மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்த பாம்பனை சேர்ந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

இநத் படகில் மொத்தம் 5 சாக்குகளில் 99 கிலோ எடை கொண்ட ஹாஷிஷ் என்ற போதைப்பொருள் இருந்துள்ளது. அதன் மதிப்பு 108 கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் தொடந்து விசாரணை நடைபெற்று வருகிறது.