மதுரை: பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் குடும்பத்தினர் வேலைக்கார இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ‘சமூகநீதி பேசும் முதல்வர் என்ன செய்கிறார்?’ இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என எவிடன்ஸ் கதிர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சிறுமிக்கு இவ்வளவு பெரிய சித்திரவதை நடைபெற்றுள்ளது. இங்கு என்ன அமைதி பூங்காவாக இருக்கிறது. காசை கொடுத்து எதையும் சரிசெய்து விடலாம் என அதிகார திமிறில் ஆளும்கட்சியினர் இருக்கின்றனர். சமூக நீதி பேசும் முதலமைச்சர் இது குறித்து பொறுப்பேற்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என குற்றம் சாட்டி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி என்பவர், சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவரது மகள் பிளஸ்2 படித்துள்ள இளம்பெண் ரேகாவை, இடைத்தரகர் மூலம், பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். ரேகா 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால், அவரை ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாக உறுதியளித்ததாக தெரிகிறது. கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட ரேகாவை, தனது குழந்தை அழும்போதெல்லாம், ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ரேகாவை சிகரெட் கொண்டு ஆண்டோ மதிவாணன் சூடு வைத்ததாகவும் தெரிகிறது. மேலும் எம்.எல்.ஏவின் மருமகள், ரேகாவின் தலை முடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்யப்பட்டு வந்ததையடுத்து, தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ரேகா. இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேகாவை வீட்டிற்கு வருமாறு அவரது தாய் அழைத்துள்ளார். அப்போது, “நீ துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்று ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ரேகாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரேகாவை காரில் அழைத்து வந்து திருநறுங்குன்றம் கிராமத்தில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இளம்பெண் ரேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்தே இந்த பிரச்சினை வெளி உலகுக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக இளம்பெண் ரேகா வெளியிட்ட வீடியோ வைரலானது.
இதைத்தொடர்ந்து, கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா மீது நீலாங்கரை போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இது கடுமை யான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தால், உடனே அதிரடியாக நள்ளிரவு சென்று கைது செய்யும் காவல்துறை, இந்த விஷயத்தில் மவுனம் காப்பது, காவல்துறை, நாங்கள் ஏவல்துறைதான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருவதாக சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை நரிமேடு பகுதியில் உள்ள எவிடென்ஸ் அமைப்பு அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது,
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் – மருமகள் வீட்டிற்கு ஏஜெண்ட் மூலமாக மாதம் 16 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 17 வயதிலயே சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். இரண்டாவது நாளிலயே அடிக்க தொடங்கியுள்ளனர். மூன்று வேலையும் சமைத்து தர வேண்டும் என கூறி பல்வேறு பொருட்களை வைத்து கொடூரமாக தாக்கி கையில் சூடு வைத்து மிளகாய்பொடியை கரைத்து முகத்தில் ஊற்றி கொடுமைபடுத்தியுள்ளனர். சமூக நீதி, பெண்கள் நலன் பேசும் திமுகவினர் பெண் குழந்தையை வீட்டில் வைத்து அடித்து கொடுமை படுத்தியுள்ளனர். இப்போது கேட்டால் மகன் பண்ணியது எனக்கு தெரியாது எனக்கூறுவதற்கு எதற்கு அரசியலில் இருக்குறங்க, சிறுமியை எம்.எல்.ஏவின் மகன் மருகள் பாத்ரூமில் உடமைகளை வைத்து தங்க வைத்துள்ளனர்
நீயும் நானும் ஒன்னா என சாதிய ரீதியாக கேட்டு ரேசன் அரிசியை சமைக்க வைத்து தனி சாப்பாடு மட்டும் சாப்பிட வைத்து கொடுமை படுத்தியுள்ளனர். நீட் எக்ஸாம் எழுதி படிப்பதற்காக கல்வி செலவுக்காக வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
சிறுமியை வீட்டிற்கு பூட்டி வைத்து அடைத்து செல்போனை பறித்து வைத்துள்ளனர். அவர்களுடைய குழந்தையை சிரிக்கவைப்பதற்காக சிறுமியை ஆட வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
எம்எல்ஏவின் மருமகளும், மகனும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி எதையும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். கையில் சூடுவைத்த காயம் தெரியக்கூடாது என்பதற்காக கையில் மருதாணி போட்டு மறைத்துள்ளனர். காவல்துறையினருக்கு FIR பதிவு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். வன்முறையை செய்துவிட்டு வாகனங்களில் வந்து ஊர்காரர்களை மிரட்டியுள்ளனர், சிறுமிக்கு மோசமாக கொடூரமான வன்கொடுமை இது தொடர்பாக இப்போது தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3.5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மாணவியின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும், மாதம் தோறும் 15 ஆயிரம் சிறுமிக்கு வழங்க வேண்டும், இருவரையும் கைது செய்ய வேண்டும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பிணைக்கொடுக்க கூடாது,
இது தமிழகத்திற்கு பெரும் அவமானம், நீட்டை பற்றி பேச தமிழக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது முதலமைச்சர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை இது கண்டிக்கதக்கது என அறிக்கை கூட விடவில்லை இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும், 3 ஆண்டுகளில் எடுத்த அனைத்து வன்கொடுமை வழக்குகள் மீதும் சந்தேகம் எழுகிறது, சிறுமிக்கு இவ்வளவு பெரிய சித்திரவதை நடை பெற்றுள்ளது.இங்கு என்ன அமைதிபூங்காவாக இருக்கிறது , 17 வயது சிறுமியை எப்படி வீட்டு வேலைக்கு சேர்த்தார்கள். ஒரு ரூபாய் கூட சம்பளம் தராமல் கொடுமை படுத்தியுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.