டில்லி
டில்லியில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக நாட்டின் வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போல் காட்சியளிக்கிறது டில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.
தற்போது, தலைநகர் டில்லியில் நிலவி வரும் கடும் பனி மூட்டம் காரணமாக 170-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் உள்பட 53 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதைப் போல் டில்லிக்கு செல்லும் மற்றும் டில்லியில் இருந்து நாட்டின் பல பாகங்களுக்கும் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் ஓட்டுநர்களுக்குப் பனிமூட்டம் காரணமாக ரயில் பாதையைக் காண முடியாத நிலை உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்குப் பனிமூட்டம் நீடிக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.